எங்கள் பார்வை!
தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு தீர்வு கோரி போராட்டங்கள், இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட போராட்டங்கள், டி.என்.டி. ஒற்றை சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தொடர் போராட்டங்கள் என பொதுவான போராட்டங்களையும்…
இதைத் தவிர ஆங்காங்கே தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மீது சமூக ரீதியாக தொடர் பொய் வழக்குகள் மற்றும் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
இன்னும் பல தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் வசிக்கும் கிராமங்களுக்கு மின்சாரம், சாலை, குடிநீர், பேருந்து வசதிகள் கோரி போராட்டங்கள் நடத்தும் சூழ்நிலையில்தான் உள்ளார்கள்.
தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் வாழ்வுரிமைகளையும், அவர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் டிஜிட்டல் ஊடகமான தொட்டிய நாயக்கர் முரசு மூலமாக பொது சமூகம் மற்றும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுதல் நமது தலையாய பணி.
தொட்டிய நாயக்கர் சமுதாய சொந்தங்கள் அரசியல் பிரதிநிதித்துவம் அடைய வேண்டும். இதற்காக தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், வெளி நாடுகள், வெளி மாநிலங்கள், தமிழ்நாட்டில் தனியார் துறையில் பணியாற்றி வருகிற நமது இனமான சொந்தங்களின் அனுபவங்களை எழுத்து வடிவமாக்கி வெளியிட இருக்கிறோம்.
இதன் மூலம் முன்னேறத் துடிக்கும் நமது சமுதாயத்தின் இளைய தலைமுறையினருக்கு திசைகாட்டியாகவும், வழிகாட்டியாகவும் தொட்டிய நாயக்கர் முரசு நிச்சயமாக விளங்கும்!
எங்களின் நோக்கம்!
நாயக்கர் சமுதாயத்தினர் தமிழ்நாட்டில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள்.இப்படிப்பட்ட குறிப்பிடத் தக்க மனித வளம் கொண்ட சமுதாயம் இன்னமும் மிகவும் பின் தங்கியே உள்ளது.
தொட்டிய நாயக்கர் சமுதாயம் வீரமும் ஈரமும் நிறைந்த சமுதாயமாகும்.
நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால நாயக்கர், தளி எத்தளப்ப நாயக்கர் உள்ளிட்டோர் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர் நாட்டு சுதந்திரத்திற்காக போராடிய குற்றத்துக்காக நாடு கடத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களை ஈன்ற இந்த சமுதாயத்தில் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ ஆர் எஸ் அதிகாரி போன்ற மத்திய, மாநில அரசுகளின் உயர் பொறுப்புகளில் இல்லை என்பது வரலாற்றுக் கொடுமை.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை கூட நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராகவோ, மத்திய-மாநில அமைச்சராகவோ இதுவரை உருவாக்கியதில்லை. அரிதினும் அரிதாக ஒரு சிலர் மட்டுமே சட்டமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
அரசியல் கட்சிகள் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கி சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் ஆக்கப்பட வேண்டும்., அரசியல் பிரதிநித்துவம் கிடைத்தால் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம் அடுத்தடுத்து உறுதியாக கிடைத்துவிடும் என்ற நோக்கத்தில் பயணிக்கிறோம்.
மேலும் தமிழ்நாட்டில் ‘டி.என்.டி. மற்றும் டி.என்.சி. ஆகிய இரட்டைச் சான்றிதழ் முறையை ஒழித்து ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும்’ என்று வாக்குறுதியளித்துதான் 2021இல் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்த வாக்குறுதிக்கு முறையான செயல்வடிவம் கொடுக்கப்படவில்லை.
இதன் மூலம் தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட 68 சமுதாயத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒற்றை சான்றிதழ் வழங்கிட அரசியல் விழிப்புணவை இந்த 68 சமுதாயத்தினரிடமும் ஏற்படுத்திட தொட்டிய நாயக்கர் முரசு ஓங்கி ஒலிக்கும்.
தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட 68 சமுதாயத்தினரின் கல்வி, வேலை வாய்ப்பில் பெரும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி…
தொட்டிய நாயக்கர் முரசு என்ற அச்சு ஊடகத்தின் ஆசிரியராக இருந்து அதை நடத்திய திரு. கொ.நாகராஜன் அவர்கள், இப்போது அதன் அடுத்த பரிணாமமாக டிஜிட்டல் வடிவில் தொட்டிய நாயக்கர் முரசு இணைய தளமாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
யார் இந்த கொ. நாகராஜன்?
இன்றைய நாமக்கல் மாவட்டம், அன்றைய சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி என்ற் சிறு கிராமத்தில் வை. கொண்டப்பன், பொம்மாயி தம்பதியர்க்கு மகனாக 1980 செப்டம்பர் 13 ஆம் தேதி பிறந்தவர்தான் கொ.நாகராஜன்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நாகராஜன் பள்ளியில் படிக்கும்போதே அடுத்தவருக்கு உதவும் குணம், பொது நிகழ்வுகளில் தோள்கொடுக்கும் குணத்தைப் பெற்றார். மேலும் தான் பிறந்த தொட்டிய நாயக்கர் சமுதாயம் எவ்வாறு பின்னடைவான நிலையில் இருக்கிறது என்பதை அந்த சிறு வயதிலேயே சிந்தித்தார்.
தனது 18 ஆவது வயதில் ராஜகம்பள மகாஜன சங்கத்தில் இணைந்தார். இதன் மூலம் தனது சமுதாய மக்களுக்கான விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். அதன் பின் வீரபாண்டிய கட்டபொம்மன் நற்பணி மன்றத்தைத் தொடங்கி செயலாற்றினார்.
இந்த அனுபவம், சமுதாய முன்னேற்றத்தின் மீது கொண்ட பற்று ஆகியவற்றின் காரணமாக 2001 ஆம் ஆண்டு தனது 21 ஆவது வயதில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்காக, ‘விடுதலைக் களம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார் கொ.நாகராஜன்.
அன்று முதல் இப்போது வரை தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லுதல், போராடுதல், அதற்குத் தீர்வு காணுதல் என தன்னை முழுக்க முழுக்க இயக்கப் பணிக்கு ஒப்படைத்துக்கொண்டுள்ளார்.
விடுதலைக் களம் தலைவர் கொ.நாகராஜன் அவர்கள் இதுவரை தனது பொதுவாழ்வில் 19 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அனைத்து கைதுகளுமே தொட்டிய நாயக்கர் மக்களுக்கான சாதிச் சான்றிதழுக்காகவும், 10.5% இட ஒதுக்கீடு சீர் மரபினரை பாதிப்பதை சுட்டிக் காட்டி அந்த ஒதுக்கீட்டை எதிர்த்தும், டி.என்.டி. ஒற்றை சான்றிதழ் வழங்கக் கோரியும், ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்காகவும், மேகதாது அணைக்கு எதிராகவும் என தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்காகவும் போராடி பொது விவகாரங்களுக்காகவே கைதாகியிருக்கிறார்.
2001 இல் கொ.நாகராஜன் அவர்கள் ஆரம்பித்த ’விடுதலைக் களம்’ அமைப்பை வெறும் சமுதாய போராட்ட அமைப்பாக மட்டுமல்லாமல்… தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கான அரசியல் போராட்ட ஆயுதமாகவும் மாற்றினார்.
விடுதலைக் களம் மூலம் கொ.நாகராஜனும், பல சமுதாய சொந்தங்களும் இந்த சமுதாயத்துக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளனர்.
2006 சட்டமன்றத் தேர்தலில் விடுதலைக் களம் கட்சி வேட்பாளர்கள் இராசிபுரம், கபிலர் மலை தொகுதிகளில் போட்டியிட்டனர்.
2011 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியிலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அந்தியூர், திருச்செங்கோடு, பெருந்துறை தொகுதிகளிலும்… 2024 இல் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியிலும், 2026 அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலும் விடுதலைக் களம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும், அதுபற்றிய விழிப்புணர்வை தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு ஏற்படுத்தவும் இந்த தேர்தல் பிரச்சாரக் களத்தை கருவியாக பயன்படுத்தினார் கொ.நாகராஜன்.
அரசியல் களத்தின் ஓர் பகுதி தேர்தல் என்றால்… தேர்தல் அல்லாத காலகட்டங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரிடையே உரிமை உணர்வை ஊக்கப்படுத்துவதற்காக பல விழிப்புணர்வு மாநாடுகளையும் நடத்தியிருக்கிறார் கொ.நாகராஜன்.
பொள்ளாச்சி,ஈச்சநாரி, நாமக்கல், ஆப்பக் கூடல், அந்தியூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களை திரட்டி மாநாடு நடத்தியவர் கொ.நாகராஜன்.
சமுதாயத்தை காக்க வேண்டும், உயர்த்த வேண்டும் என்று உந்துதலில் 18 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்த கொ.நாகராஜன் அவர்கள்… திருமணம் செய்துகொண்டால் தனது போராட்டம் திசைமாறிவிடுமோ என்பதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் தனது குடும்பமாக நினைத்து திருமணமே செய்யாமல் இன்றுவரை தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்காக கடந்த 28 ஆண்டுகளாக உழைத்து வருகிறார்.
அழைக்காமலேயே சமுதாய பிரச்சினைகளுக்காக ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் கொ.நாகராஜன்….
அவரை நீங்கள் அழைக்க வேண்டுமென நினைத்தால்
9487066643, 9445506643 என்ற எண்களில் அவரது குரல் உங்களுக்காக ஒலிக்கும்!
