ஈரோடு மாவட்டத்தையும், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தையும் பெருமைப்படுத்தும் விதமாக தேசிய அளவிலே முக்கியமான விருது பெற்று இருக்கிறார் ஈரோட்டை சேர்ந்த வணிகவியல் ஆசிரியரான திரு. சசிகுமார்.
காமர்ஸ் டீச்சர்ஸ் பவுண்டேஷன் (CTF) என்ற இந்திய அளவிலான அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்சி பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் மாணவர் சாதனையாளர்களை உருவாக்குதல் என்ற அடிப்படையில் இந்திய அளவிலான சிறந்த வணிகவியல் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விருது அளிப்பது வழக்கம்.
இந்த அடிப்படையில்
தலைநகர் டெல்லியில் இந்தியா இன்டர்நேஷனல் சென்டரில் 18வது சிடிஎப் விருது வழங்கும் விழா கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது.
இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு சிபிஎஸ்இ பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஈரோடு அடுத்த வள்ளிப்புறத்தான்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சி எஸ் அகாடமி சிபிஎஸ்இ பள்ளியை சேர்ந்த வணிகவியல் பிரிவு ஆசிரியரான சசிக்குமார் தேசிய அளவிலான மூன்றாம் இடத்தை பிடித்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிபிஎஸ்இ 2025- 26 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கல்வி சாதனைகளில் சிறந்து விளங்கியதற்காக ஆசிரியர் சசிக்குமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பள்ளிக்கு வந்த ஆசிரியருக்கு சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தொட்டிய நாயக்கர் முரசு சார்பில் பேராசிரியர் சசிகுமாரை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
அப்போது அவர் நம்மிடம்,
“இந்திய லெவல்ல கிட்டத்தட்ட லட்சக்கணக்கான ஆசிரியர் பெருமக்கள் இந்த அவார்டுக்கு அப்லை பண்ணி இருந்தாங்க. அதுல வந்து என்னை இந்தியா லெவல்ல மூன்றாவது இடத்துல செலக்ட் பண்ணி இருக்காங்க.

இது எப்படி செலக்ட் பண்ணி இருக்காங்க அப்படின்னா… லாஸ்ட் இயர் சிபிஎஸ்இ போர்டு ரிசல்ட்ஸ் பொறுத்து எத்தனை நம்பர் ஆப் ஸ்டூடென்ட்ஸ் சென்டம் வாங்கி இருக்காங்க, 90 மதிப்பெண்களுக்கு மேல எவ்வளவு வாங்கி இருக்காங்க அப்படிங்கற அந்த கிரைடீரியா வச்சுதான் இந்த அவார்ட் செலக்ட் பண்ணிருக்காங்க.
அதுல இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் நம்ம ஈரோடு டிஸ்ட்ரிக்ட்ல முதல் இடத்தையும் வந்து நான் பெற்றுள்ளேன்.
17 வது டைம் வந்து இந்த அவார்டு நடக்குது. பேஸ்ட் ஆன் அகாடமிக் பெர்பார்மன்ஸ் அதாவது முழுக்க முழுக்க கல்விக்காக செய்த சேவை, நம்முடைய பயிற்றுவிக்கும் திறத்தால் மாணவர்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்து இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்து வழங்கி இருக்கிறார்கள்.
இந்த வெற்றிக்கு காரணம் வந்து என்னுடைய ஸ்டுூடென்ட்ஸ் தான். அவங்க கொடுத்த மார்க்னால மட்டும்தான் இந்த அவார்ட் வந்து கிடைச்சிருக்கு. என்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியர்கள், சுதந்திரமாக என்னை பணி செய்ய உரிமை கொடுத்துள்ள எனது நிர்வாகம் என அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார் சசிகுமார்.
கல்வியில் பல்வேறு சாதனைகளை செய்வதற்காக இது போன்ற
அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.




நமது இனமான சொந்தம் சசிகுமார் அவர்களை தொட்டிய நாயக்கர் முரசு சார்பாகவும் வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்!













