தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும் – மாற்றம் வரவேண்டும்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கல்வியின் மாண்பை இவ்வாறு உரைத்துள்ளார்.
கல்வி தரும் ஆறு படிகள்
கல்வி மூலம் அறிவு, அறிவின் மூலம் ஒழுக்கம், ஒழுக்கம் மூலம் அன்பு, அன்பு மூலம் கருணை, கருணை மூலம் ஞானம், ஞானத்தின் மூலம் வாழ்க்கை உயர்வு. எனவே, *கல்வி உடையாரே எல்லாம் உடையார்.*
ஔவையார் சொன்னார்:
கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!
இவ்வளவு சிறப்பு இருந்தும், நம் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் இன்றும் விழிப்புணர்வு இன்றி விளிம்பு நிலையிலேயே உள்ளனர்.
இன்றுவரை நம் சமுதாயத்திலிருந்து ஒருவர் கூட மத்திய, மாநில ஆட்சியில் உயர் பதவி, சுப்பிரீம் கோர்ட் நீதிபதி, இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. விஞ்ஞானியாக, எந்தத் துறையிலும் உயர் பதவியில் நம் சமுதாயத்தினருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.
இந்த நிலை மாற வேண்டும் என்றால், நம் இளைய சமுதாய சொந்தங்கள்:
முழு வீச்சுடன் படிப்பறிவு பெற்று, பல துறை வல்லுநர்களாக வலம் வர வேண்டும்.
கல்வியின் முக்கியத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும், அதை எப்பாடுபட்டாவது அடைய உழைக்க வேண்டும்.
உழவுத் தொழிலை மட்டுமே நம்பி வாழாமல், கல்வி அறிவு மட்டுமே போதாது, கணினி அறிவும், செயற்கை நுண்ணறிவும் பெற்றிருக்க வேண்டும்.
பிற்போக்கான எண்ணங்களை விடுத்து, முற்போக்கான சிந்தனைகளை வளர்த்து, முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும்.
வாங்க, அனைவரும் கல்வி கற்போம், நம் கவலைகளை மறப்போம், காலம் போன போதாவது இனிமேல் காலத்தோடும், சமுதாயமெனும் நம் கனவுகளை நோக்கி பயணிப்போம். விரைவில் வெற்றிக் கனியை ஒவ்வொரு துறையிலும் பறிப்போம்.
கல்வி பற்றி விவேக சிந்தாமணி:
வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது,
வேந்தராலும் கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழியக் குறையாது,
கள்ளத்தாலும் களவாட முடியாது, கல்வி என்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெங்கும் பொருள்தேடி உழல்வதென்னே!
பொருள்: கல்விச் செல்வம் வெள்ளத்தால் அழியாது, நெருப்பால் வேகாது, அரசராலும் பறிக்க முடியாது, பிறருக்கு கொடுத்தாலும் குறையாது, திருடரால் திருட முடியாது. இத்தகைய உயர்ந்த செல்வம் உள்ளத்தில் இருக்க, வெளியில் பொருள் தேடி அலைவது வீண்.
ஆகையால் சமுதாய சொந்தங்களே! கல்வி என்னும் சாகரத்தைப் பருகி, சரிவில்லா சமுதாயம் அமைத்திடப் புறப்படுவீர்!
இப்படிக்கு,
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர் & துறைத் தலைவர்,
பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் –













