இந்திய விடுதலைக்கு முதல் இடிமுழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 227 ஆவது நினைவு நாள் புகழ் அஞ்சலி விழா, வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடத்தில் நடைபெற இருக்கிறது.
கோவில்பட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பாக நடைபெறும் இவ்விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரான வைகோ அவர்கள் பங்கேற்கிறார். அவருடன் திருச்சி எம்பி துரை வைகோ அவர்களும் பங்கேற்கிறார்.

வைகோ அவர்கள் கடந்த 33 ஆண்டுகளாக தொடர்ந்து (பொடா சிறைவாசம், கொரானா ஊரடங்கு தவிர) வீரபாண்டிய கட்டபொம்மன் புகழஞ்சலி விழாவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவதை முதற்கடமையாக கருதி நிறைவேற்றி வருகிறார்.

அந்த வகையில் அதே துடிப்போடும் உணர்வோடும் இந்த வருடம் அக்டோபர் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தும் வைகோ அவர்கள், அதன் பின் வீர உரையாற்றுகிறார்.
மேலும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடம் முன்பு அமைந்துள்ள ஸ்ரீ வீர சக்கதேவி ஆலயத்தில் பொங்கலிட்டு வழிபடும் நிகழ்வு, கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் அணி வகுப்பு அஞ்சலி, அன்னதானம் ஆகிய நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
அன்று மாலை 6 மணிக்கு அருகே உள்ள மாவீரன் ஊமைத்துரை அரங்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வரலாற்று ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழஞ்சலி கருத்தரங்கம் நடைபெறுகிறது.














