திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை நகராட்சியின் சார்பாக கடந்த 25-07-1958 -ஆம் ஆண்டு இந்திய விடுதலை போராட்டத்தில் தன் இன்னுயிரை துறந்து விடுதலைப் போராட்ட மாவீரர் பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாண நிதியமைச்சர் மாண்புமிகு சி.சுப்பிரமணியம் அவர்களால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
இந்த சிலை அமைக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இடமே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததது. பாளையங்கோட்டை என இன்று அழைக்கப்படும் பகுதி அக்காலத்தில் கோட்டையாக இருந்தது. அக்கோட்டையின் தென்மேற்கு மூலையில் உள்ள கொத்தள பகுதியில்தான் மாவீரன் கட்டபொம்மனுக்கு சிலை எழுப்பப்பட்டது.
அத்தோடு அச்சிலையைச் சுற்றி வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட போர் நிகழ்வுகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டு சிலையை சுற்றி அமைக்கப்பட்டு இருந்தது, தற்போது அச்சிற்பங்கள் எந்தவிதமான பராமரிப்பும் இன்றி மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது.
எனவே மோசமான நிலையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள போர் நினைவு சிற்பங்களை மீண்டும் நல்ல முறையில் பராமரித்து பொதுமக்கள் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளவும் அதை நினைவு கூறும் வகையிலும் அச்சிற்பங்களை அழகுற பராமரித்து மீண்டும் நிறுவிட வேண்டும்.
அதேபோல வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் சிலையை சுற்றி செயற்கை நீரூற்றுகளும் இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவும் அமைக்கப்பட்டிருந்தது தற்போது அங்கு செயற்கை நீரூற்றானது செயல்படாமல் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார்கள் காணாமல் போய்விட்டன இதனால் அப்பகுதி மிகவும் மோசமடைந்துள்ளது எனவே காணாமல் போன மின் மோட்டார்களுக்குப் பதிலாக புதிய மின் மோட்டார்களை பொருத்தி மீண்டும் செயற்கை நீரூற்றினை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மேல் குறிப்பிட்ட குறைபாடுகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலையிட்டு விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் சிலை அமைந்துள்ள பகுதியை மீண்டும் அழகுற எழில் கொஞ்சும் பூங்காவாகவும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை பொதுமக்கள் அனைவரும் நினைவு கூறத்தக்க வகையிலும் மாற்றி பராமரிப்பு செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
மகத்தான மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்ததோடு அரசின் கடமை முடிந்துவிடவில்லை. அந்த சிலையை பராமரித்து பாளையங்கோட்டையின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திட வேண்டும்!
வரலாற்றைத் திரும்பிப் பார்க்காத இனம் வளர்வதற்கு வாய்ப்பில்லை. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும் இனம் தளர்வதற்கு வாய்ப்பில்லை.
வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரிடம் இருந்து தாய்நாட்டைக் காப்பாற்றினார். அவரது சிலை மற்றும் பூங்காவை தமிழ்நாடு அரசு காப்பாற்றுமா?


















