ஒரு மணி ஒலித்தால் மாமன்னர் கட்டபொம்மன் ஞாபகம்… திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி பற்பல ஆண்டுகளுக்குப் பின் 2026 ஆகஸ்ட் 29 ஆம் தேதி பகல் பொழுதில் ஒலித்தது. இது வெறும் மணியோசை அல்ல… வரலாற்றின் எதிரொலி!
இந்த மணியோசை கேட்டு முருக பக்தர்கள் மட்டுமல்ல, மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகளும், கட்டபொம்மனின் புகழ் பாடும் வரலாற்று ஆர்வலர்களும் கூட மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்செந்தூரில் ஒலிக்கும் இந்த மணிக்கும், பாஞ்சாலங்குறிச்சியில் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் என்ன சம்பந்தம்?
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படுகிறது திருச்செந்தூர். இந்த கோயில் இன்று நேற்றல்ல… ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் கடலோரக் கலை வடிவமாகவும்… முருகப் பெருமானின் அருள் வழியும் ஆலயமாகவும் திகழ்கிறது.
இந்தக் கோவிலில் சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகள் கொண்ட கோவில் ராஜகோபுரம் உள்ளது. இந்த ராஜகோபுரத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மாபெரும் பித்தளை மணி நிலைநிறுத்தப்பட்டது.
மாமன்னர் கட்டபொம்மன் சிறந்த முருக பக்தர். திருச்செந்தூர் முருகனுக்கு நைவேத்யம் ஆன பிறகுதான் தான் உணவு உண்ணுவது என்பதை வழக்கமாக வைத்திருந்தார் கந்த பக்தரான கட்டபொம்மன்.
அந்த வகையில் திருச்செந்தூர் திருக்கோயிலில் பகல் 12 மணிக்கு உச்சி காலம் ஆகும்போது அதாவது செந்திலாண்டவருக்கு மதிய உணவு படைக்கப்படும்போது மணி அடிப்பார்கள்.
திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வரை சில மைல்கள் தூரத்துக்கு ஒரு மணிமண்டபம் என கணிசமான மணிமண்டபங்களை கட்டபொம்மன் கட்டி வைத்தார். இன்னும் சொல்லப் போனால், மணிமண்டபம் என்ற பெயரே கட்டபொம்மனின் இந்த முயற்சியால்தான் உருவானது. அந்த மணி மண்டபங்கள் முருக பக்தர்களும் வழி போக்கர்களும் தங்கும் இடமாகவும் பயன்பட்டது.
திருச்செந்தூர் கோயிலில் உச்சி கால மணி ஒலித்த அடுத்த நொடியே அடுத்தடுத்த மணி மண்டபங்களில் இருக்கும் மணிகள் ஒலிக்கும், அதைக் கேட்டு அடுத்த சில நிமிடங்களில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மணியும் ஒலிக்கும். அதன் பிறகுதான் கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகனையும், சக்கதேவியையும் வழிபட்டுவிட்டு மதிய உணவு சாப்பிடுவார்.
இதற்காகவே வீரபாண்டிய கட்டபொம்மனின் உபயமாக அந்த பித்தளை மணி திருச்செந்தூர் கோயிலுக்கு வழங்கப்பட்டது. அந்த மணியை மீண்டும் ஒலிக்க வைக்க வேண்டும் என பல கோரிக்கைகள் அரசிடம் வைக்கப்பட்டன
இந்த நிலையில் ஆவணி மாதத்தில் அதாவது ஆகஸ்டு 29 ஆம்தேதி முதல்… திருச்செந்தூர் கோயிலுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி பல்லாண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
வீரமும் பக்தியும் எவ்வாறு வரலாற்றுப் பெருமைகொண்ட நமது பண்பாட்டில் இருந்துள்ளது என்பதற்கு இதுவே சான்று.
கந்தன் திருக்கோவிலில் ஒலித்த கட்டபொம்மனின் மணியோசை கேட்கும்போதெல்லாம், நமக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவு அருந்த தயாராகும் காட்சி மனதுக்குள் ஓடுகிறது.
இந்த மணி ஒலிக்கும்போதெல்லாம் காற்றில் கட்டபொம்மன் பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும்!













