கடந்த ஆட்சியில் மாநகர சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம், ‘விடியல் பயணம்’ என்ற பெயரில் நடைமுறையில் இருந்தது.
இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய், தேர்தலில் தான் அளித்த வாக்குறுதிப்படி…
புறநகா் அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2 முதல் செயல்படுத்தப்படும் என நடந்து முடிந்த சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.
அதன்படி, அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி முதல் இத்திட்டத்தை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து முதல்வா் விஜய் தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற நிலையில்… இந்தத் திட்டத்தின் கீழ் வேறு எந்தெந்த பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்?
• மாநகர மற்றும் நகரப் பேருந்துகள் (சாதாரண)
• எக்ஸ்பிரஸ் (Express) பேருந்துகள்
• எல்எஸ்எஸ் (LSS) பேருந்துகள்
• டீலக்ஸ் (Deluxe) பேருந்துகள்
• புறநகர் மற்றும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள்
வெற்றிப் பயணம் திட்டம் மூலம் முதல் கட்டமாக, மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமன்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ், தாழ்தள அரசுப் பேருந்துகளிலும், இனி பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம்.

அதேநேரம் மாநகர ஏசி பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியாது.
கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகா் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் தாய்மார்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடுகளோ இல்லை. திருநா்களும் இலவசமாகப் பயணிக்கலாம்.
தொலைதூரம் செல்லும் சொகுசுப் பேருந்துகள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்க இயலாது.












