தொட்டிய நாயக்கர் முரசு இணையதளத்தை துவக்கி வைத்து மூத்த பத்திரிகையாளரும் சிவா மீடியாஸ் யு ட்யூப் சேனல் ஆசிரியருமான சிவசுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய உரை…
”தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் பங்கேற்பதில் மகிழ்கிறேன். பல அச்சு ஊடகங்கள் மூடுவிழாவை நோக்கி போய்விட்டன. அவை இணைய தளங்களாக மாறிவிட்டன. குறிப்பாக கொரோனா எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. கொஞ்ச நஞ்ச சிந்தனை கொண்ட சமூகத்தை, சிந்தனை ஆற்றலே இல்லாத சமூகமாக கொரோனா மாற்றிவிட்டது.
வைத்தியத்தை ஃபேஸ்புக்கில் பார்த்து செய்கிறார்கள். ரசம் வைக்கக் கூட யு ட்யூபை தேடுகிறார்கள். அடுத்த கட்டமாக பிரசவம் பார்ப்பதை கூட யு ட்யூபில் தேட ஆரம்பித்தார்கள். அதாவது எது சரி எது தவறு என்று தெரியாத அளவுக்கு இந்த சமூக ஊடகம், சமூகத்தை முன்னெடுத்து போய்க் கொண்டிருக்கிறது.
இனிமேல் எதைப் பற்றியும் யாரும் இங்கே தெரிந்துகொள்ளலாம் என்ற நிலையில் சமூக ஊடகங்கள் எல்லாமுமாக மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் சமூக ஊடகங்களில் போலிகள் நுழைந்துவிட்டன. நம்மை ஏமாற்றும் ஊடகங்கள் அதிகமாக வந்துவிட்டன.
இதற்கெல்லாம் இடையில்தான் நண்பர் கொ.நாகராஜன் தொட்டிய நாயக்கர் முரசு என்ற இணைய தளத்தை மக்களுக்காக கொண்டு வந்திருக்கிறார்.
நான் அடிப்படையில் பெரியாரிய கோட்பாட்டை பின்பற்றுகிறவன். சாதி என்ற கட்டமைப்பு எனக்கு பிடிக்காது. இருந்தாலும் இந்த சமூகத்துக்குள் ஒரு ஒழுக்கமும், கட்டுக்கோப்பும், நெறியும், நம்பிக்கையும் வளர வேண்டும் என்றால் சாதி என்ற ஒன்று இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஏனென்றால் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாக இருக்கும் இந்த கட்டமைப்பை நம்மால் அடித்து உடைத்துவிட முடியாது. ஆனால் அதை எப்படி நல்ல நிலைக்கு கொண்டு வருவது என்றுபேசக் கூடிய தலைவர்கள் இன்று யாரும் இல்லை.

இன்று சாதி சங்கம் ஆரம்பித்தால்… நான்காவது நாளில் ஒருகொலை.. கலவரம் முன்னூறுபேர் கைது. அந்த சாதி சங்க தலைவர் தியாகி பட்டம் வாங்கிவிடுவார். இதுதான் இன்று சாதி சங்கங்கள் மத்தியில் நடக்கிறது. இது எல்லாவற்றுக்கும் நடுவில்… எந்த குற்ற நிகழ்வுக்கும் போகாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் கொ.நாகராஜன்.
நானும் இருபதாண்டுகளாக தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை கவனித்து வருகிறேன். அவர்களுக்கென கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால் அவை பிறரை பாதிக்காத கட்டுப்பாடுகளாக இருக்கின்றன.
சுமார் இருபது நாட்களுக்கு முன்னால் ஈரோடு மாவட்டம் பட்டாசு பாளையத்தில் ஒரு விழா நடந்துகொண்டிருந்தது. தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மாரியம்மன் விழாதான் அது. என்னை உபசரித்து சாப்பிட சொன்னார்கள். இப்படி ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் நாகராஜன்.
பத்திரிகையாளர் என்பதால் பல சமுதாய தலைவர்களோடும் பழக வேண்டியிருக்கும். நான் பழகிய சாதித் தலைவர்களில் பலரும் ஏதோ ஒரு சூழலில்… ‘எங்க பையன் சாராய கேஸ்ல மாட்டிக்கிட்டான். எங்க பையன் போக்சோவுல மாட்டிக்கிட்டான். எங்க பையன் கொலைகேஸ்ல மாட்டிக்கிட்டான். இதை பத்தி செய்தி போடாதீங்க… செய்தி வர்ற் மாதிரி இருக்கு தடுத்து நிறுத்திடுங்க’ என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் பழகிய 25 ஆண்டுகளில் திரு. கொ. நாகராஜனிடமிருந்து எந்தவித போன் அழைப்பும் தனிப்பட்ட கோரிக்கைக்காக வந்ததில்லை. சமுதாய ரீதியான பாதிப்புகள், நீதி கேட்கும் செய்திக்கான வேண்டுகோள்கள்தான் வைப்பார்.
அந்த வகையில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் பாரம்பரியமான பெருமை கொண்ட சமுதாயமாக இருந்தாலும் நவீன காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளாத சமுதாயமாக இருக்கிறது. இந்த சமுதாயம் நவீன காலத்துக்கேற்ப வளர்ச்சிபெற தொட்டிய நாயக்கர் முரசு பயன்படும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்” என உரையாற்றினார்.













