தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிகை துவக்கத்தில் இருந்து ஆலோசகராக இருந்து இன்றுவரை நம்மை அக்கறையோடு வழி நடத்தும் ஐயா சேலம் எம்.பி. சதாசிவம் அவர்கள் தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் வாழ்த்துரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரை வருமாறு…
”இனிய மாலை பொழுதிலே உங்களை எல்லாம் சந்திப்பதிலே நான் பெருமிதம் அடைகிறேன். நாம் இங்கே எத்தனை பேர் இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட வேண்டிய அவசியமில்லை. மிக சரியானவர்கள் மிகச் சிலர்தான் இருப்பார்கள். அந்த மிகச்சிலரில் ஒருவராக நம்முடைய அருமை தம்பி நாகராஜன் இருக்கிறார்.
சிறுவயதிலே மீசை கூட அவருக்கு சரியா வரவில்லை. அந்த காலத்திலே இருந்து நாம் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட தன் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற இன உணர்வோடு இந்த விடுதலை களத்தையும் தொட்டிய நாயக்கர் முரசையும் இன்றைக்கும் நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஆரம்ப காலங்களில் ஊர் கூட்டங்களில் பேசுவோம். பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறோம். அதன் பிறகு மாவட்ட அளவு மாநாடுகளில் பேசி இருக்கிறோம். மாநில அளவு மாநாடுகளிலே உரையாற்றி இருக்கிறோம். பல்வேறு விதமான மறக்கப்பட்ட மனிதர்களுக்கு எல்லாம் நினைவு நாள் கொண்டாடி இருக்கிறோம்.
25 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிகை கொண்டு வரணும் கொண்டு வரணும்னு என்று அவர் பேசிக்கொண்டே இருந்தபோது… நான் என்னுடைய மகன் திருமண விழாவில் தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிகையை வெளியிட்டேன்.

என்னுடைய மகனுடைய திருமண விழாவில ஒரு 2000 பேர் கலந்துகொண்டிருப்பார்கள். அன்றைக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பாட்டாளி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் சேலம் கார்த்தி, மேச்சேரி காமராஜ் இருவரையும் வைத்து வெளியிடப்பட்டது.
அதற்கு பிறகு தொடர்ந்து நடத்துவதிலே இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் சொன்னார். நான் சில சமயம் உதவி செய்ததுண்டு. செய்ய முடியாமல் போனதும் உண்டு.
பல்வேறு வகையிலும் அவர் இன்றைக்கு வரைக்கும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். அந்த போராட்டத்திற்கான தீர்வு இன்னும் கிட்டவில்லை.
இன்னும் அடையாளமற்றுதான் தொட்டிய நாயக்கர்கள் இருக்கிறார்கள், கம்பள நாயக்கர்கள் இருக்கிறார்கள். பழம் பெருமையை பேசி கொண்டு இருக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வெளியிலே வர வேண்டும் என்று சொன்னால் பரவலாக இருக்கக் கூடியவர்கள் பார்வையாளர்களாக இருப்பதை விடுத்து- சமுதாயத்திற்கு உழைப்பவர்களாக வரவேண்டும்.
பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் சொன்ன மாதிரி நாங்களும் ஜாதிக்கு எதிரானவர்கள்தான். ஆனால், எந்த ஜாதியால் நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்களோ அந்த ஜாதி அடிப்படையில் நீங்கள் திரள வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆட்டோக்காரர்களுக்கு தொந்தரவு வந்தா எல்லா ஆட்டோக்காரர்களும் ஒன்னா சேர்ந்து சங்கம் வச்சுதானே போராடணும்? அது மாதிரி இந்த ஒடுக்கப்பட்ட ஜாதி, வஞ்சிக்கப்பட்ட சமுதாயங்கள் தங்களுக்குள் இணைந்து போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இதுலயும் ஒரு கட்டம் தாண்டி தெலுங்கு பேசக்கூடிய மக்களை எல்லாம் ஒருமித்த குடையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எல்லாம் நடைபெற்றது. அது எந்த அளவுக்கு என்றால்… அவர்கள் எல்லாம் சேர்ந்து நாகராஜனை தலைவரா கூட தேர்ந்தெடுத்தாங்க.
வரலாற்றில் பல இயக்கங்கள் பல பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார்கள் அந்த முயற்சிகள் எல்லாம் தோற்றிருக்கிறது. ஆனால் 25 ஆண்டுகளாக இந்த தொட்டியநாயக்கர் முரசு இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்று இணைய தளத்திலே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது என்று சொல்கிற போது அது நாகராஜன், அவரோடு உழைத்தவர்கள் அவருடைய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இவ்வளவு நாள் அவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் எல்லோருக்குமான பங்களிப்பு என்பது அதில் இருக்கிறது.
அவர் சொன்ன போராட்டங்கள் எல்லாம் 10% தான், தொட்டிய நாயக்கர் முரசு இதழை ஒவ்வொரு மாதமும் கொண்டுவருவதற்கு அவர் பட்ட சங்கடங்கள், போராட்டங்கள் இன்னும் 90% இருக்கிறது.
இந்த இதழைத் தாண்டி கொ.நாகராஜன் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.
தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக அரசியல்வாதிகளிடம் தன்னை தனித்து காட்டிக் கொள்வதற்காக பல்வேறு இழப்புகளை சந்தித்திருக்கிறார். நாங்கள் அவருக்கு சொல்லி கொடுத்தது எல்லாமே எந்தவிதமான சமரசத்திற்கும் உட்படக்கூடாது என்பதுதான். நியாயமான விஷயங்களுக்காக இறுதிவரை நிற்க வேண்டும், ஜெயிக்கிற வரைக்கும் நிற்க வேண்டும்- சமரசத்துக்கு உள்ளாகக் கூடாது என்பதுதான்.
அதுதான் எங்கள் பலம், எங்கள் பலவீனமும் அதுதான்.
எனவே இந்த சமுதாயத்தினுடைய வளர்ச்சிக்கும் இந்த மக்களுடைய ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் இந்த இணையவழி இதழ் என்பது மிகப்பெரிய அளவிலே பயன்பட வேண்டும் என்று உங்கள் அனைவர் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.
நாகராஜனை பொறுத்தவரையில் ஒரு அற்புதமான மனிதர். தான் பிறந்த சமுதாயத்திற்கு உழைப்பதற்கான அற்புதமான மனிதர். காமராஜர் அவங்க இவங்கள எல்லாம் சொல்றாங்க. அவங்க காலத்துல அவங்க பதவி எல்லாம் வகிச்சாங்க. நல்லா சுகமாதான் வாழ்ந்தாங்க. ஒரு பெரிய இயக்கத்தில இருந்தாங்க. அதெல்லாம் பெருமைக்குரிய விஷயம் கிடையாது.
ஒரு நயா பைசா மரியாதை இல்லாத சூழலில ஒரு 150 ரூபா கூட கதி இல்லாத அந்த சூழலில அவர் உழைத்திருக்கிறார். தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் அவருக்கு அடையாளம் காட்டினோம். இந்த வழியால போனா சரியா இருக்கும் அந்த வழியில போனா சரியா இருக்கும் என அடையாளம் காட்டினோமே தவிர… அவராக உழைத்து முன்னேறி வந்திருக்கிறார்.
இந்த இணையவழி இதழ் என்பது மேலும் ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் வெற்றியையும் பெற வேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகிறேன்” என்று பேசினார் ஐயா எம்.பி. சதாசிவம் அவர்கள்.













