காத்திருக்கும் கயத்தாறு
வீரபாண்டிய கட்டபொம்மன் என்று உச்சரிக்கும் போதே நமக்குள் ஒரு சிலிர்ப்பு உருவாகும்.
விடுதலைப் போராட்ட உணர்வை சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஊட்டிய வரலாற்று நாயகன் தான் கட்டபொம்மன்.
வீரபாண்டிய கட்டபொம்மனையும் அவரது தியாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில்… தமிழ்நாட்டின் வெவ்வேறு காலகட்டங்களில் முதலமைச்சராக இருந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கடமையை, மரியாதையை கட்டபொம்மனுக்கு செய்திருக்கிறார்கள்.
கலைஞர் மு கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிய வைப்பதற்கான பல்வேறு செயல்பாடுகளை தங்களது அரசு மூலமாக நிறைவேற்றினார்கள்.
அந்த வகையில் இப்போது முதலமைச்சராக வந்திருக்கிற திரு. விஜய் அவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனை பெருமைப்படுத்தும் வகையில் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
முந்தைய முதலமைச்சர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு… இன்றைய முதலமைச்சர் விஜய், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்ப்போம்.
1970களில் தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட்ட போது… ஒவ்வொரு மண்டலத்திலும் வரலாற்று நாயகர்களின் பெயரிலே போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் என பெயர் சூட்டியவர் கலைஞர்.
இதில் சிலர் மாற்றுக் கருத்து சொல்கிறார்கள். எனினும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் பகிரப்பட்டுள்ள தகவல்களின்படி…
’பாண்டியன் சாலைப் போக்குவரத்துக் கழகத்தைப் பிரித்து, கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் லிமிடெட் என்ற பெயரில் 12.12.1973 அன்று நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது; நாகர்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு 01.04.1974 முதல் இது தனது செயல்பாட்டைத் தொடங்கியது.
பின்னர் திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்ட ‘கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் லிமிடெட்’ என்றும், நாகர்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்ட ‘நேசமணி போக்குவரத்துக் கழகம் லிமிடெட்’ என்றும் இக்கழகம் 01.04.1983 அன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்துக்கு கலைஞர், எம்.ஜி.ஆர் இருவருமே மெருகு ஏற்றியிருக்கிறார்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னராக இருந்து அரசாட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வெள்ளையர்களால் தகர்க்கப்பட்டது. கட்டபொம்மனை கயத்தாறில் தூக்கிலிட்டபின், மெல்ல மெல்ல பாஞ்சாலங்குறிச்சி கோட்டை என்ற அடையாளத்தையும் அழித்தார்கள் வெள்ளைக்காரர்கள்.
இது பற்றி தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் க. சுப்பு அவர்களும், இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மணலி கந்தசாமி அவர்களும் அன்றைய முதல்வர் கலைஞரிடத்தில் தொடர்ந்து ஒரு கோரிக்கையை வைத்தார்கள்.
அதாவது வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும், அதை வரலாற்று சின்னமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை.
கட்டபொம்மன் மீது இயல்பாகவே பற்றுக் கொண்டிருந்த கலைஞருக்கும் அதில் ஆர்வமாகி அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமான பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டியன் கட்டபொம்மன் கட்டி அரசாண்ட கோட்டையை மீண்டும் எழுப்பினார்.
1974 ஆகஸ்ட் 18ஆம் தேதி அந்த எழுச்சிமிக்க கோட்டையின் திறப்பு விழா முதல்வர் கலைஞர் மு கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
வரலாறுகளில் காணப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு முன்பு கட்டபொம்மன் கோட்டை இருந்த இடத்தில் தான் இந்த கோட்டையை எழுப்பியிருக்கிறோம் என்று கலைஞரே இந்த விழாவில் கூறியுள்ளார்.
15 மீட்டருக்கு 15 மீட்டர் சதுர அளவு பரப்பு கொண்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் மையத்தில் பத்து மீட்டர் உயரமுள்ள மைய தர்பார் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் மேல்புற கடைசியில் உள்ள மேடையில் உடைவாளின் மீது கையினை வைத்தவாறு வீற்றிருக்கும் அமைப்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் அழகு கம்பீரச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
கோட்டையில் உள்ளே இருக்கும் நினைவு மண்டபத்தின் சுவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு, வெள்ளை அதிகாரி ஜாக்சன் துரையோடு வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய உரையாடல்கள் போன்றவை ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.
மேலும் கோட்டைக்குள்ளேயே கட்டபொம்மன் குடும்பத்தினரின் குலதெய்வமான ஶ்ரீ ஜக்கதேவி அம்மா ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்ல… பாஞ்சாலங்குறிச்சியிலேயே வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு வீடு கட்டிக்கொடுத்து அவர்களை அங்கேயே குடியேற்றி.. பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் துறை பதிவு ஆவணங்களையும் உருவாக்கினார் முதலமைச்சர் கலைஞர்.
மேலும் 1999 அக்டோபர் 16ஆம் ஆண்டு பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதின் 200 வது ஆண்டு நினைவை போற்றும் வகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதன் பேரில் கட்டபொம்மனுக்கு தபால் தலை வெளியிட இசைந்தார் வாஜ்பாய். முழுக்க முழுக்க திரு வைகோ அவர்கள்தான் இதற்கு காரணம். அந்த கட்டபொம்மன் கம்பீர தபால் தலை, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
கட்டபொம்மனுக்கு எம்.ஜி.ஆர். செய்தது என்ன?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவை போற்றும் வகையில்… ஒரு மாவட்டத்துக்கு கட்டபொம்மன் பெயரை சூட்டினார்.
1986 ஆம் ஆண்டில் எம்ஜிஆரின் ஆட்சியில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்படி உருவான தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிதம்பரனார் பெயரையும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு கட்டபொம்மன் பெயரையும் சூட்டினார் எம்ஜிஆர்.
திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்தையும் உருவாக்கினார் எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆரை பொறுத்தவரை சிவாஜி நடித்து வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் முதலில் எம்ஜிஆர் தான் நடிக்க வேண்டி இருந்தது. அப்போது வேறு படங்களில் தேதி கொடுத்து விட்டதால் வீரபாண்டிய கட்டபொம்மன் வாய்ப்பை இழந்துவிட்டதால் அவர் வருத்தப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் உண்டு.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஜெயலலிதா உருவாக்கிய கம்பீரச் சின்னம்!
கலைஞர், எம்ஜி ஆர் வரிசையில் ஜெயலலிதா அவர்கள் வீரபாண்டியன் கட்டபொம்மனை பெருமைப்படுத்தும் வகையில் மகத்தான பங்களிப்புகளை தமது ஆட்சியிலே செய்துள்ளார்.
2015 ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார். பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஒருவகை கம்பீரம் என்றால் கயத்தாறு கட்டபொம்மன் மணிமண்டபம் இன்னொரு கம்பீர நினைவுச் சின்னமாக அமைந்துள்ளது.
கட்டபொம்மனுக்கு மரியாதை- கலைஞர் வழியில் ஸ்டாலின்
அடுத்ததாக கடந்த 2021 – 26 முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அமைக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 2023 பிப்ரவரி 14ஆம் தேதி கட்டபொம்மனின் உருவச் சிலையை திறந்து வைத்தார்.
இவ்வாறு முந்தைய முதல்வர்கள் தங்களது ஆட்சி காலங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தையும் வீரத்தையும் பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு கம்பீர நினைவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வரிசையில் இப்போது 2026 இல் ஆட்சிக்கு வந்திருக்கும் தமிழக வெற்றி கழக தலைவரான முதலமைச்சர் விஜய் அவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக சில விஷயங்களை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி கயத்தாறில் ஒரு புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
கட்டபொம்மனை கைது செய்த வெள்ளைக்கார போலீசார், இப்போது கயத்தாறு காவல் நிலையத்தின் பின் பக்கத்தில் உள்ள இடத்தில் அதாவது அப்போது காவல்நிலையம் அமைந்த பகுதியில் கட்டபொம்மனை கைது செய்து வைத்திருந்தனர்.
வரலாற்று புகழ் பெற்ற அந்த இடத்தில் இப்போது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்ட அந்த இடத்தில் அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்ப வேண்டும் என கயத்தாறு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் வரிசையில் வரலாற்றில் முதலமைச்சர் விஜய்யும் இடம் பெற வேண்டும்! கட்டபொம்மனுக்கு கயத்தாறில் இன்னொரு நினைவுச் சின்னத்தை முதல்வர் விஜய் எழுப்ப வேண்டும்!
வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 227 ஆவது நினைவு தினம். அந்த வீரப் பெருநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிடுவாரா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.




















