இப்போது அனைத்து வங்கிகளிலும் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் என்றால் அதில் குறைந்தபட்ச வைப்புத் தொகை என ஒரு தொகையை வங்கிகள் நிறைய செய்துள்ளன.
உதாரணத்துக்கு சில வங்கிகளில் 2000 ரூபாய், சில வங்கிகளில் ஐயாயிரம் ரூபாய் குறைந்தபட்ச இருப்பு இருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த தொகையை நம் வங்கி கணக்கில் வைத்திருக்காவிட்டால்… நம் கணக்கில் ஒரு பெருந்தொகை வரும் பொழுது மினிமம் பேலன்ஸ் வைக்காததற்காக அபராதங்களையும் வங்கிகள் நம் கணக்கில் இருந்து பிடித்துக் கொள்ளும்.

இது பல பேரின் புலம்பலாக இருக்கும் நிலையில்… மினிமம் பேலன்ஸ் இல்லாமல் வங்கிக் கணக்கு வைத்திருக்க முடியும் என ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.
இந்த வங்கி கணக்குக்கு பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்கு என்று பெயர். இதில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆதார் கார்டு மற்றும் பேன் கார்டு அல்லது படிவம் எண் 60 உடன் சுலபமாகத் தொடங்கி விடலாம்.
பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்டை (பிஎஸ்பிடிஏ) எந்த ஒரு தனிநபரும் தொடங்கிவிடலாம். இதற்கு குறிப்பிட்ட வயது வரம்போ வருமான வரம்போ எதுவும் இல்லை.
பிஎஸ்பிடி கணக்கை தொடங்க ஆரம்ப டெபாசிட் எதுவும் தேவையில்லை. அந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கும் அவசியமும் இல்லை.
வாடிக்கையாளரின் கோரிக்கையின் பேரில் வழக்கமான சேமிப்புக் கணக்கை பிஎஸ்பிடி கணக்காக மாற்றலாம்.
பிஎஸ்பிடி கணக்குதாரர்களுக்கு ஏடிஎம்-கம்-டெபிட் கார்டு போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
பிஎஸ்பிடி கணக்குகளில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் வரம்பின்றி பணம் செலுத்தலாம்.
ஆனால் பிஎஸ்பிடி கணக்குதாரர்கள் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக நான்கு முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதில் ஏடிஎம்-ல் பணம் எடுப்பது, ஆர்டிஜிஎஸ்/நெஃப்ட்/கிளியரிங்/இன்டர்நெட் டெபிட்/நிலையான ஆணை/இஎம்ஐ போன்றவை அடங்கும்.

பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்கைத் தொடங்குங்கள். இதற்கு உங்கள் அருகில் உள்ள வங்கிகளை அணுகுங்கள். இதில் ஒரு முக்கியமான விஷயம், உங்களுக்கு ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் கணக்கு என இரண்டையும் ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியாது. ஏதேனும் ஒன்றைத்தான் வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது!













