விருதுநகர் மாவட்டம், சொக்கநாதன் புத்தூர் அருகே உள்ள மேலூர் துரைசாமிபுரத்தில்… விடுதலைப் போருக்கு முதல் முழக்கமிட்டு தூக்கு மேடை ஏறி தூக்கு கயிற்றை முத்தமிட்டு மரணித்த விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவாக, 1970 ஆண்டு ராஜகம்பள சமுதாயத்தினரால் அந்த கிராமத்தில் சிலை வைக்கப்பட்டது

சுமார் 55 ஆண்டு காலமாக சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மன் பிறந்த நாளான ஜனவரி 3ஆம் தேதியும், தூக்கு மேடை ஏறி தூக்கு கயிற்றை முத்தமிட்ட அக்டோபர் 16ஆம் தேதியும் ஒவ்வொரு ஆண்டும் அந்த கிராம மக்களால் சிலை அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலைகளால் ஜோடிக்கப்பட்டு விழாவாக கொண்டாடி மகிழ்ந்து வந்தார்கள்.
காலப்போக்கில் சிலை அமைந்துள்ள இடம் பள்ளமாகவும் சாலை மேடாகவும் ஆகிவிட்டதால், சிலையை எடுத்துவிட்டு அதே இடத்தில் வைக்க வேண்டுமென்றால் அரசின் அனுமதி பெறவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதில் சிக்கல்களும் ஏற்பட்டன.
எனவே கிராம மக்கள் ஒன்று கூடி அதே இடத்தில் பீடத்தை உயர்த்தி அந்தப் பீடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை வைத்தனர்.
இதன் திறப்பு விழா கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
சமுதாயத் தலைவர் பால் லிங்கம் நாயக்கர் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு துரை வைகோ அவர்கள், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை திறந்து வைத்தார்.

கட்டபொம்மனுடைய தியாகத்தை போற்றும் வகையில் பல்வேறு வரலாற்று சம்பவங்களை சுட்டிக்காட்டி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநிலத் துணைத் தலைவர் கே கோபால்சாமி, சிவகாசி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் வேல்முருகன், பாஞ்சாலங்குறிச்சி வீர ஜக்கதேவி ஆலய கமிட்டி நிர்வாகிகள் வலசை கண்ணன் உட்பட ஏராளமான தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


சுற்று வட்டார சமுதாய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கட்டபொம்மன் சிலைத் திறப்பு விழாவுக்கு கம்பீரம் சேர்த்தனர்.













